Home    |      About Us     |      Services     |      Careers        Contact Us   
 
Feel free to share your creation to the world through 3gmission.com & introduce this page to your friends and relatives.
 

 

 

விவிலிய தமிழ் கவிதைகள் - திருமதி. ரதி ஆசீர், மதுரை
(asir_rathi@yahoo.com)

 

1.            அகர வரிசையில் ஆண்டவரின் ஆளுகை
2.            அவருக்குப் போதித்தவன் யார்?
3.            தெளிதேனிலும் மதுரம்
4.            இவர் யாரோ?
5.            ஒய்வு நாள்
6.            நேரம், சமயம், காலம்.
7.            இயற்கையை ரசி
8.            பாதம் என் தியானம்
9.            புறா
10.          பந்தய ஓட்டத்தின் பரிசு
11.          நறுமணம் கமழும் இயேசு
12.          கண்ணிகளினின்று கழன்றிடு
13.          விண்ணின் மகிமை மண்ணில்
14.          தனிமை தரும் இனிமை
15.          சிறந்த சித்திரம்.
16.          பிரபஞ்ச சஞ்சாரம் போராட்டமே
17.          புது சிருஷ்டி
18.          ஆதியாகம இறைவன்
19.          சந்திக்கும் இடம்
20.          வியர்த்தமாகா வெகுமதி
21.          வெளிப்பாட்டின் சத்தம்
22.          மெய் தொட்ட வம்ச வரலாறு
23.          தரிசித்த சிசு
24.          365 புதிய பக்கங்கள்
25.          இயேசுவே உம் கிருபை வேண்டும்
26.          புது வருஷம் பொக்கிஷம்
27.          சுற்றுப்பயணம்
28.          வாழ்க தாய் நாடே
29.          மூவர்ண கொடி ஏற்றிடு
30.          தேசமே இயேசுவோடு கரங்கோர்த்திடு
31.          விடுதலை நாயகர் இயேசு
32.          மனைவியின் விலை
33.          மனைவியின் மன்றாட்டு
34.          பிந்தியவர் முந்தினர்
35.          யோசேப்பு கனி தரும் செடி
36.          பத்மு தீவினிலே
37.          சிலுவையிலறையாதே இயேசுவை மறுபடியும்
38.          வலப்பக்க கள்ளனின் வரலாறு
39.          எனக்காய் நீர்
40.          துளிர்க்கட்டும் தெய்வீக குணம்.


Top

1. அகர வரிசையில் ஆண்டவரின் ஆளுகை

அண்ட சராசரங்களை அந்தரத்தில் சுழலவிட்டது
அகிலம் படைத்தவரின் ஆற்றல்
ஆழியை ஆணையால் அடக்கியது
ஆதிமுதலானவரின் ஆதிக்கம்
இருளும் ஒளியும் கண்ணாமூச்சி ஆடுவது
இறைவனின் சித்தரிப்பு
ஈவாக ஒரே குமாரனை பரிசளித்தது
ஈசனின் அன்பளிப்பு
உயிர்த்தெழுந்து தந்த வெள்ளங்கி காட்சி
உன்னதமானவரின் மாட்சி
ஊழிய பாதையை மனிதனுக்கு அறிமுகப்படுத்தியது
உலகு மீது வைத்த நேசத்தின் சாட்சி
எல்லையை கடலுக்கு திட்டமிட்ட பெருமை
எல்லை கடந்த அவரது அறிவு
ஏழைக் கோலமெடுத்து உலாவந்த தாழ்மை
ஏக மைந்தனுக்கும் மாந்தருக்குமுள்ள உறவு
ஐங்காயம் இயேசு ஏற்றது தியாகத்தின் உச்சம்
ஒளிரும் மின்னல் அவர் கைக்குள்ளான மாயம்
ஒப்பில்லா இறைவனின் மகத்துவம்
ஓய்வுநாளில் சுகம் அருளிய மருத்துவம்
ஒரே தேவன் இயேசுவின் மனதுருக்கம்
ஒளஷதமாம் இரட்சிப்பு நாம் பெற்ற பாக்கியம்
அஃதே இயேசுவின் பின் நாம் அணிவகுக்கும் சிலாக்கியம் !

 

Top

2. அவருக்குப் போதித்தவன் யார்?
ஏசாயா 40 : 13

ஞானத்தை தேவனுக்கு போதித்தது யார்?
நியாயத்தை அவருக்கு படிப்பித்தது யார்?

மின்னும் வானில் விண்மீன் திரட்சியும்
மினுக்கும் மின்மினி பூச்சியின் காட்சியும்
கோடி கோடி கிரகங்கள் வானில் உலாவர
பாடி பாடி தாரகைகள் விண்ணில் வட்டமடிக்க
அவருக்கு போதித்தவன் யார்?

சுற்றும் உலகம் சற்றும் அசையாதிருக்க
காற்றிடை பூப்பந்தை சுழல விட
சூரிய சந்திரனை அந்தரத்தில் தொங்கவிட
முகிலை உருவாக்கி மாரியை பொழிவிக்க
அவருக்கு ஆலோசனை தந்தவன் யார்?

விவேகத்தை வளர்க்க போதித்தது யார்?
விஞ்ஞானத்தை ஆராய வித்திட்டது யார்?
கணிப்பொறி கண்டெடுக்க கற்பித்தது யார்?
அணுசக்தி அகன்றெடுக்க ஆலோசனை தந்தது யார்?

விலங்குகளிடம் கேட்டால்
விதவிதமாய் கற்பிக்குமே
பறவைகளிடம் கேட்டால்
பாடி பாடி இசைக்குமே!

இத்தனையிலும் இறைவனின் இன்குரல் ஒலிக்கிறதே
இத்தரையில் இயற்கையின் குரல் எதிரொலிக்கிறதே
இறைவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை
இறைவனை மறைத்து மனிதன் செய்வது எதுவுமில்லை

அவருக்கு போதிப்பவன் எவருமில்லை
அவரின் ஆலோசகர் யாருமில்லை
அற்புத படைப்பனைத்தும் தேவனது யோசனை
அறிவுக்கு எட்டாதது அவரது ஆலோசனை

 

Top

3. தெளிதேனிலும் மதுரம் (சங்கீதம் 19:10)

தேனிலும் மதுரம் தேவ நியாயம்
தெளி தேனிலும் இனிமை இறை நீதி
தித்திக்கும் தேன் தேவ வசனம்
திகட்டா இனிமை இயேசு நாமம்
இனிக்கும் இயேசுவின் இன்ப நாமத்தை
இருளில் குடியிருப்பவர்க்கு அறிமுகப்படுத்தி
இறைவனிடம் நெருங்கச் செய்யும் காந்தமாவோம்
இயேசுவண்டை இழுத்து வரும் சங்கிலியாவோம்

வண்ணப் பூக்களில் அமர்ந்து தேனருந்தும்
வண்ணத்துப் பூச்சி தேன் சேகரிப்பதில்லை
தேன் உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சிக்கு
தேன் பிறருக்கு வழங்கும் எண்ணமில்லை
கூட்டமாக தேன் குடிக்கும் தேனீ
கூடு கட்டி தேடி சேர்க்கும் தேனை
கூடி கூடி தானும் குடித்துக் களித்து
தேடி வரும் மாந்தரையும் மகிழ்விக்கும்

ருசித்து மகிழும் இயேசுவின் மகிமையை
பசித்து வாடும் மனிதர் ருசிக்கச் செய்வோம்
அனுபவம் நமக்கே என்ற சிந்தனையை விட்டு
அறியாதவரும் இயேசுவை சந்திக்கச் செய்வோம்
உபயோகமற்ற வண்ணத்துப் பூச்சிபோல
உதவாத வாழ்வு வாழ்ந்து விரயமாக்காது
தேன் தரும் சுயமற்ற தேனீ போல
தேனினியை இயேசுவைத் தந்திடுவோம் தரணிக்கு

உருக்கி ஒளியூட்டும் மெழுகுவர்த்தி போல
உலகுக்கு வழி சொல்வோம் கலங்கரை தீபமாக
வேத வெளிச்சத்தில் வாழுவோம்
வசன மதுரத்தில் மகிழுவோம்

 

Top

4. இவர் யாரோ?

இவர் யாரோ?
இவர் தச்சனின் மகனோ?
அவரது முதல் கூட்டம்
அலைமோதியது ஜனத்திரள்
எருசலேமின் எல்லைகளிலிருந்தும்
யோர்தானுக்கு அப்புறத்திலிருந்தும்
கலிலேயா கடற்கரையிலிருந்தும்
தெக்கப்போலி நகரத்திலிருந்தும்
திரண்டிருந்தது மக்கள் வெள்ளம்
தாகத்தோடிருந்தது மனித உள்ளம்
இவர் யாரோ?
இவர் போதகரோ?

செல்லும் பாதையெல்லாம் அற்புதங்களின் ஊற்று
நடக்கும் வழிநெடுக அதிசயங்களின் சான்று
காற்றும் கடலும் கட்டுப்படுகிறது
காலாற கடல் மேல் உலா வருகிறார்.
குருடன் பார்வையடைகிறான்
முடவன் குதித்தோடுகிறான்
வஸ்திரம் தொட்டவர் சொஸ்தமாகின்றனர்
விடுதலையாகின்றனர் சிறைப்பட்டவர்
இவர் யாரோ?
இவர் அதிகாரம் நிறைந்தவரோ?

கருனை உள்ளம் உருக்கத்தின் ஊற்றாகிறது
கண்கள் உறங்குவதில்லை, தூங்குவதில்லை
கல் முள்ளில் நடக்கப் பாதம் தயங்குவதில்லை
களைப்பில் அவரது உடல் மயங்குவதில்லை
இவர் யாரோ?
இவர் - இருக்கிறவராகவே இருக்கிறவர்
இவர் - இயேசு கிறிஸ்து
இவர் - இரட்சகர்

 

Top

5. ஒய்வு நாள்

ஒழுங்கின்றிக் கிடந்த அண்டத்தை
ஒழுங்கு படுத்தியது இறைவனது வார்த்தை
ஒவ்வொன்றாய் படைத்தார் பூகோளிலே
ஒவ்வொன்றும் நல்லது என்று பூரித்தார் !
ஆணைகளிட்டார் ஆறு நாட்களும்
அமர்ந்திருந்தார் ஏழாம் நாளிலே
புனிதப்படுத்தினார் இறைவன் ஒய்வுநாளை
பணித்தார் தேவன் மனிதனையும் ஒய்வெடுக்க!

பொழியவில்லை மன்னா ஏழாம் நாளிலே
பொறுக்கினர் இருமடங்கு ஆறாம் நாளிலே
அடுப்புப் பற்றவைக்காது பரிசுத்த சபை கூடி
ஆராதியுங்கள் என்னை ஓய்வு நாளிலே என்றார்!

பத்துக் கற்பனைகளில் நான்காவது கட்டளையானது
பரிசுத்தமாய் ஆசரியுங்கள் ஓய்வுநாளை என்பது
பத்து நரம்பு வீணையில் மீட்டும் கீர்த்தனம்
பாட்டாக இசைக்கும் ஓய்வுநாள் சங்கீதம்

பிரசங்கித்தார் இயேசு ஆலயத்தில் ஓய்வுநாளில்
பரிசளித்தார் சுகம் பெதஸ்தாவில் ஓய்வு நாளில்
குருடனின் விழிகள் திறந்தார் ஓய்வுநாளில்
கூனியை நிமிரவைத்தார் ஓய்வுநாளில்

ஓய்வுநாளில் இயேசு ஓய்ந்திராது ஓடியாடி
ஒத்தாசை புரிந்தார் ஒடுக்கப்பட்டோருக்கு
ஓய்வு நாளுக்காக மனிதன் வாழவில்லை
ஓய்வுநாள் மனிதனுக்காகவே விடிகிறது!

 

Top

6. நேரம், சமயம், காலம்.

நேரம் எடுத்துக்கொள் ஜெபம் ஏறெடுக்க
நேர்த்தியான வேளை அது தேவனை சந்திக்க
நேரம் எடுத்துக்கொள் வேதம் வாசிக்க
நேர்மைக்கு அஸ்திபாரம் அதுவே!
நேரம் செலவழித்து சிந்தனை செய்
நேரான வழியை நீ சந்திப்பது மெய்
நேரம் செலவழி கனவுகளில் திளைக்க
நிகழ்வுகளின் உந்து சத்தி அதுவே!
சமயத்தோடு முடித்திடு அலுவலக வேலை
சகல உயர்வுகளுக்கும் அதுவே விலை
சமயம் எடுத்து சிறந்த நூல்கள் வாசி
சமஸ்த அறிவின் உற்பத்தி ஸ்தானம் அதுவே!
தேவையுள்ள சமயம் பிறர்க்கு உதவு-உன்
துன்ப வேளையில் உனக்கு திறக்கும் கதவு
தேவையுள்ள ஊழியரை உபசரிக்கும் வேளை
தூதரையும் உபசரிப்பாய் சில வேளை
நேரம் எடுத்துக் கொள் மனம் விட்டு சிரிக்க
நோய்கள் விடுபட்டு பறந்தோடிடும்
நேரம் எடுத்து ஓடி விளையாடிடு
நிலையான இளமையின் இரகசியம் அதுவே!
நேரம் கொடு ஓய்வெடுக்க – அது உன்
சோர்வனைத்தையும் ஒழித்து விடும்
நேரம் கொடு இளைப்பாற- அதினால்
சோர்ந்த உடல் களைப்பாறும்!
காலம் எடுத்து நிறைவேற்று இறைபணி
இயேசு பரிசளிப்பார் ஆவியின் கனி
காலம் எடுத்து அறிவித்திடு நற்சுவிசேஷம்
இயேசு சன்மானமாக்கிடுவார் நல் மோட்சம்!

 

Top

7. இயற்கையை ரசி

கானகம் சென்று கவனித்துப் பார்த்தேன்
வானம்பாடியின் பாடல் கேட்டேன்
வீழும் அருவி இசையில் இதயம் திளைத்தேன்
வீசும் தென்றல் காற்றில் மேனி சிலிர்த்தேன்
கவலை மறந்தேன்
கர்த்தரைத் துதித்தேன்!
நெளிந்தோடும் சிற்றோடை சிரிப்பை சிந்தியது
வளைந்தோடும் நீரோடை கவிதை சொல்லியது
வண்ணப் பூக்கள் கண்ணைக் கவர்ந்தன
வண்ணத்துப் பூச்சிகள் விழிக்கு விருந்தாயின
இன்னல் மறந்தேன்
இயேசுவைத் துதித்தேன்!
சிட்டுவின் கீச்கீச்சை ரசித்தேன்!
மெட்டுடன் இசைக்கும் குயிலை ரசித்தேன்
சாரிசாரியாக ஊரும் எறும்பினை ரசித்தேன்
மரம் விட்டு மரம் தாவும் மந்தியை ரசித்தேன்
தேவை மறந்தேன்
தேவனை துதித்தேன்!
இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொள்
இன்னல்கள் வாழ்வில் கரைந்தோடிடும்
இனிமை உன்னைத் தொற்றிக் கொள்ளும்
இயேசுவைத் துதிக்க உள்ளம் துள்ளும்!
கவலை மறந்திடு மனிதா
கர்த்தரை துதித்திடு இனிதாய்!

 

Top

8. பாதம் என் தியானம்

திரு விவிலியமே இறைவன் இயேசுவின் பாதம்
திருப் பாதத்தில் தரித்திருப்பதே என் தியானம்!

நிமலன் இயேசுவின் பாதம்
நீலக்கல்லிழைத்த நித்திய பாதம்
நியாயாதிபதியின் சத்திய பாதம்
நிழல் தரும் பளிங்கு பாதம்
ஒளி வீசும் பொற் பாதம்
ஒலிவ மலையில் ஓடிய பாதம்
காடு மலை சுற்றிய பாதம்
கல்லும் முள்ளும் குத்திய பாதம்
தைலம் பூசிய பரிமள பாதம்
தையல் தலைமுடி துடைத்த பாதம்

ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் உலவிய பாதம்
உலைக்களத்தில் காய்ந்த வெண்கல பாதம்

நளதம் மணம் கமழும் பாதம்
நற்செய்தி சொல்லித் திரிந்த பாதம்
பேதுரு பற்றிப் பிடித்த பாதம்
யவீரு விழுந்து வணங்கிய பாதம்
சீடரோடு சுற்றி மகிழ்ந்த பாதம்
சிலுவை சுமந்து நொந்த பாதம்
தண்ணீரில் உலவிய பாதம்
கண்ணீரில் நனைந்த பாதம்
குருதியில் குளித்த பாதம்
கெத்செமனேயில் கெஞ்சிய பாதம்!

பரிசுத்த பாதம் ஒளியூட்டி வழிகாட்டும் தீபம்
பரிசுத்த வேதம் மனித வாழ்வை மீட்டும் நாதம்
அதிகாலை பாத தியானம் - அன்றைய பயண அரண்
அந்திமாலை  தோத்திரபலி - இரவில் பாதமே சரண்!

 

Top

9. புறா

வெண்மையே புறாவின் அழகு
வெள்ளை உள்ளம் அணிந்து பழகு
கபடற்ற புறா, சமாதான சின்னம்
கசப்பற்ற அதின் தன்மை சாந்தத்தின் அடையாளம்
கண்ணீர் ததும்பும் புறாவின் கண்கள்
கள்ளமில்லை என்னில் என பகரும்!

கன்மலையின் வெடிப்பு அவைகளின் வாசஸ்தலம்
சிகரங்களின் மறைவு அவை கூடி வாழும் ஸ்தலம்
ஆண் புறாவுக்கு பெண் புறா ஒன்றொடு மட்டுமே நட்பு
பெண் புறாவுக்கு ஆண் புறா ஒன்றில் மட்டுமே அன்பு
கற்புடன் கூடி குலவி மகிழும்
கரையற்று பாடி உலவி மருளும்!

நோவாவுடன் பேழைக்குள் புகுந்த பேதை புறா
நோவாமல் வாழ்ந்தது ஜலப்பிரளய காலத்திலும்
ஒலிவ இலையை அலகில் கொத்திய புறா
ஒயிலாக திரும்பி வந்தது ஒருதினம்
சிறகடித்து விடைபெற்று பறந்து சென்ற புறா
சொன்னது பூவில் நீர் வற்றியது என மறுதினம்!

ஞானமுழுக்கு பெற்று கரையேறிய இயேசு கண்ட காட்சி
வான் திறந்து ஆவியானவர் இறங்கிய புறா ரூப மாட்சி
பறக்கும் வெண்புறா சித்தரிக்கும் மேன்மை
பரிசுத்தாவியானவர் சுத்திகரிப்பதின் மகிமை
தூய ஆவியானவரின் அரவணைப்பில் திளைத்து
தூய்மை தரித்திடு மணிப்புறாவை பிரதிபலித்து!
என் புறாவே! நீ உத்தமி!

Top

10. பந்தய ஓட்டத்தின் பரிசு

வாழ்க்கை ஒரு பந்தய சாலை
பந்தய ஓட்டம் கிறிஸ்தவ வாழ்க்கை
வாழ்க்கை சாலையில் ஓடும் நீ
பரிசு பெறும் நோக்கோடு ஓடு
உணவு உறக்கம் கட்டுப்படுத்தி
ஓடுக்கிக் கீழ்ப்படுத்து

எல்லைக்கோட்டுக்குள் ஓட பயிற்சித்தால் லேசு
எல்லைவிலகி ஒட முயற்சித்தால் இழப்பாய் பரிசு
ஓடினான் சவுல் எல்லை விலகி தமஸ்குநோக்கி
ஓய்ந்திராது கலங்கடித்தான் கிறிஸ்தவரைத் தாக்கி!
நிறுத்தினார் தேவன் சவுலின் கோணலான ஓட்டத்தை
நிலைப்படுத்தினார் அவனை அவனுடைய இடத்தில்!

அன்றிலிருந்து அவன் ஓடவில்லை தனக்காக
அப்போஸ்தலன் பவுலாக ஓடினான் இயேசுவுக்காக
வலதிடது பக்கம் சாயாமல் நேராக ஓடினான்
வாஞ்சை கொண்டு வேகம் எடுத்து ஓடினான்
நிச்சய மில்லாதவனாக ஓடவில்லை
நிச்சயத்தோடு பரிசை பெற ஓடினான்!

கண்ட இடமெல்லாம் ஓடாதே
காடு மேடு பள்ளம் பாயாதே
கோட்டுக்குள் விலகாமல் ஓடிடு
குறிக்கப்பட்ட இடத்துள் ஓடிடு
பந்தய பொருளுக்காக வேகமாக ஓடு
பரிசைபெறும் நோக்கோடு விரைந்தோடு

திரள் கூட்டம் பார்க்கிறது உன் ஓட்டத்தை
திரள் சாட்சிகள் உண்டு உன் ஓட்டத்துக்கு
பரிசு உண்டு பந்தய போட்டி முடிவில்
பரலோக பாக்கியம் உண்டு பந்தய நிறைவில்
அழைப்பின் சப்தம் கேட்பாய்
அழிவில்லா கீரிடம் பெறுவாய்!

Top

11. நறுமணம் கமழும் இயேசு

வெட்ட வெட்ட சந்தனமரம்
கமழும் சந்தன மணம் போல
சொட்ட சொட்ட சிலுவை மரம்
சிந்திய திருரத்தம் பரப்பியது பரிமளம்!

இயேசுவின் திவ்விய குணங்கள் மணத்தது சிலுவையில்
வீசிய வாசனை பேசியது வசனங்கள் ஏழு
இயேசுவின் இதயம் வாசனை பரப்பியது பாசத்தை
விண்ணப்ப மணம் குருசில் மன்னித்தது பாவத்தை!

ஆணிகள் கடாவிய கரங்கால்களில்         
வடிந்தது பரிமள தைல நற்கந்தம்
கூர் ஈட்டி குத்திய விலாவில்
கொட்டியது வாசனை திரவிய சுகந்தம்
முள்முடி பாய்ந்த சிரசினின்று
சிந்தியது சாரோனின் ரோஜா மணம்
பாளமாக உழப்பட்ட உடம்பிலிருந்து
பள்ளத்தாக்கு லீலி வீசியது புனித மணம்!

கல்லறையினுள் உறங்கிய உடலில் நளதமணம்
கல்லறை தோட்டத்தில் உலவியவர் வாசனை நறுமணம்
சிலுவையில் உடைக்கப்பட்ட பரிமள பரணியானவரின்
வாக்கினால் மருதோன்றிப் பூ மணக்கிறது உள்ளமெல்லாம்
வெண் வஸ்திரம் மின்னும் பரிமள தைலமானவரின்
வாசனை பரம்பி பரிமளிக்கிறது உலகமெல்லாம்
பரிசளித்தார் இயேசு மனுக்குலத்துக்கு இரட்சிப்பின் புதுமணம்
பரிசுத்தருக்கு நமது மணக்கும் அன்பளிப்பு –மாசற்ற மனம்

 

Top

12. கண்ணிகளினின்று கழன்றிடு

கண்ணிகளில் பலவகையுண்டு மண்ணில்
தானியம் வீசுதல் குருவிக்குக் கண்ணி

தூண்டில் புழு மீனுக்குக் கண்ணி
பண்டமுள்ள பொறி எலிக்குக் கண்ணி

விதவித குழிகளுண்டு விலங்குகளுக்கு
வெவ்வேறு வலைகளுண்டு பறவைகளுக்கு

வித்தியாசமான கண்ணிகளுண்டு மனிதனுக்கு
விரிக்கிறான் வலை சாத்தான் தந்திரமாக!

மதுவைக் காட்டி இழுக்கிறான் சாத்தான் மனிதனை
மாய சிநேகிதரின் அறிமுகம் சீரழிக்கிறது வாலிபரை

பணப் பேராசையில் வீழ்த்துகிறான் பலரை
பெண்ணாசை சிறையில் சிக்க வைக்கிறான் சிலரை- ஆனால்

சாயவில்லை யோசேப்பு மங்கை விரித்த மாயவலையில்
சிக்கவில்லை இயேசு பிசாசு வீசிய மாயஜாலக் கலையில்

சாத்தான் வீசும் வலைகளைக் கிழித்தெறிந்திடு
சத்துரு வைக்கும் பரீட்சையில் வெற்றிக் கொடி நாட்டிடு!

வேட்டைக்காரன் கைக்கு மான் தப்பி ஓடுவது போல
வேடுவன் கைக்கு குருவி நழுவி பறப்பது போல

விலகிடு சோதனையினின்று – அது சாதனை
வஞ்சனையில் வீழ்ந்திட்டால் - அது வேதனை!

சுருக்குகளில் சிக்கிடாமல் தப்பித்திடு கண்ணிகளினின்று
ஜெபித்து போராடி கழன்றிடு பாவ சாப கட்டுகளினின்று

மதியீனத்தை வென்று வையக வாழ்வை வனப்பாக்கிடு
மகிமை வாழ்வில் இயேசுவின் பின் அணிவகுத்திடு!

Top

13. விண்ணின் மகிமை மண்ணில்

"பேதுரு, யாக்கோபு, யோவான், வாருங்கள்"
பரமன் இயேசு விடுத்த அழைப்பு மூவருக்கு மட்டுமே!
மற்ற ஒன்பது பேரும் மலை அடிவாரத்திலே
உற்ற நண்பர் மூவரும் ஏறினோம் இயேசுவோடு!

                உச்சியை அடைந்தோம் நால்வரும்
உயர்த்திய கரங்களுடன் இயேசு
கதிரவன் போல் சுடர் வீசியது வதனம்
குளித்தது வெய்யோன் ஒளியில் வஸ்திரம்
பிரகாசித்தது இயேசுவின் முழு உருவம்
மாறியது பரிசுத்தரின் முகரூபம்
பிரமிக்க வைத்த அற்புத காட்சி
மாபெரும் தெய்வீக தரிசன மாட்சி!

கடலைப் பிளந்து மக்கள் கூட்டத்தை கடக்க வைத்து
கல்வெட்டில் கற்பனை சுமந்து வந்த விடுதலை வீரர் மோசே
விதவை மகனுக்கு உயிரூட்டி, வானில் அக்கினி ரதமேறி
விண்ணின் காற்றில் சுழன்ற தீர்க்கதரிசி எலியா-

                இருபெரும் ஊழியரும் மண்ணில் இறங்கி
இயேசுவுக்கு இணையாக உரையாடிய நிகழ்ச்சி
ஈடில்லா உணர்ச்சி பிழம்பின் நெகிழ்ச்சி
ஒளிமேகம் நிழலிட ஒலித்தது இடிகுரல்

"இயேசு எனது அன்பு மைந்தர்-நேசிக்கிறேன் இவரை
இறைமகனை கவனித்துக் கேட்டு விசுவாசியுங்கள்

                மூவரும் திடுக்கிட்டு திகைத்தோம்
முகங்குப்புற தரையில் வீழ்ந்தோம்
அன்புக் கரங்கள் எமைத் தொட்டுத் தூக்கி
"அஞ்சாதிருங்கள்" என்றன பயம் போக்கி!

மலையில் நாங்கள் கண்ட காட்சி
விண்ணின் மகிமைக்கு அத்தாட்சி
மீனவர் எமக்குக் கிடைத்த மகிழ்ச்சி
வானவர் பரிசளித்த ஆன்மீக மலர்ச்சி

Top

14. தனிமை தரும் இனிமை

சிலருக்குத் தனிமை இனிமை
பலருக்குத் தனிமை வெறுமை
தனிமை சுகம் என ஆனந்திப்பவருமுண்டு
தனிமை சுமை என அங்கலாய்ப்பவருமுண்டு

கர்த்தருக்குக் காத்திருக்கும் நேரம் தனிமை
கர்த்தரோடு சஞ்சரிக்கும் வேளை இனிமை
ஈசாக்கு தேவனை தியானித்தார் தனிமையில்
ஏனோக்கு ஈசனோடு சஞசரித்தார் இனிமையாய்
தேவ சாயல் உடுத்திடும் வேளை
தேவ உறவில் லயித்திடும் வேளை
முகம் பிரகாசிக்கும் நேரம்
அகம் பிரவாகிக்கும் நேரம்

தனித்திருக்கும் நேரம் தேவனை தரித்திருக்கும் நேரம்
தனித்திருக்கும் வேளை தேவனை தரிசிக்கும் வேளை
தனிமை உருவாக்கும் தெய்வீக உறவை
தனிமை வளர்க்கும் வேத அறிவை
தனிமையானார் இயேசு வனாந்தரத்தில்
தனிமை இயேசுவின் வலிமையாயிற்று
சோதனை வெல்ல பெலனாயிற்று
சாத்தானை ஜெயிக்க சத்துவமாயிற்று

தனித்திரு இயேசுவோடு இளைப்பாறும் பகலில்
தனிமைப்படு தேவனோடு படுக்கையில் இரவில்
மனமகிழ்ச்சியின் திறவுகோல் தனிமை
மனம் மறுரூபமாக தேவை தனிமை

தனிமை சந்தித்திடு
சந்தடி தவிர்த்திடு
தனிமைக்குத் தேவை அமைதி
அமைதியே தனிமை தரும் வெகுமதி…!

Top

15. சிறந்த சித்திரம்.

சிறந்த சித்திரமாக
வண்ணந் தீட்டத் துவங்கினேன் எனது வாழ்வை!
எண்ணங்கள் சிறகடித்தன எனது சிந்தையிலே
கணப்பொழுதினிலே வண்ணக் கலவை
சிதறி தெறித்தது சித்திரத்திலே
சிதைந்தது சித்திரம்
கலைந்தது ஓவியம்
கலைந்த ஓவியம் என்னைக் கவலையிலாழ்த்தியது
கண்ணீர் சொரிந்து கந்தையானேன் நான்!
சித்திரக் கலைஞர் ஒருவர் எனது
அருகிலேயே நிற்பதைத் கண்ணுற்றேன்
அவரது சிங்கார கரத்திலே வண்ணத் தூரிகை!
சீர் குலைந்த கோலத்தை அவரது
சிங்கார கரத்திலே அர்ப்பணித்தேன்!
சிதைந்த சித்திரத்தை
சீர்ப்படுத்த ஆரம்பித்தார்- அவரது
கை வண்ணத்திலே ஓவியம்
பௌர்ணமி நிலவாய் பரிமளித்தது – எனது
எண்ணத்தில் உதித்த வண்ண ஓவியம் - எனது
எண்ணத்தை விட வசீகரமாய்
கண்ணை நிறைத்து கருத்தைக் கவர்ந்தது!
கலைந்த சித்திரம்
கண்காட்சி ஓவியமாயிற்று!
சிதிலமானதை சீர்படுத்தி
சிக்கலானதை சிடுக்கெடுத்து
சிறகொடிந்ததை காயம் ஆற்றி
சிறுமையானவனை சிங்காரித்து
சீர் கெட்டவரையும் அவரது ஸ்பரிசம்
சீர் பொருத்தி ஸ்திரப்படுத்துமே!

சிதைந்த சித்திரத்தை
சீர்படுத்தி சிங்காரித்து
சிறந்த சித்திரமாக மாற்ற வல்லவர்
சிலுவை நாதர் இயேசு கிறிஸ்து!

Top

16. பிரபஞ்ச சஞ்சாரம் போராட்டமே (எபேசியர் 6:12)

பிரபஞ்ச சஞ்சாரம் சஞ்சலமே
பிராணன் போகும்வரை போராட்டமே!
பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டமானது வாழ்கை
பூவுலகில் பிரவேசிக்க தாயோடு போராடுகிறது குழந்தை

                புதிய சூழல் பழக அழுது போராடுகிறது
புரண்டு உருண்டு பாலுக்கு போராடுகிறது

தவழும் பொழுது தரையோடு போராட்டம்
தத்தி நடக்கையிலே சுவரோடு போராட்டம்

                பள்ளி செல்ல அடம் பிடித்து போராடுகிறது
படித்து மதிப்பெண் பெற புத்தகத்தோடு போராடுகிறது!

வாலிபன் பட்டம் பெற கல்லூரியில் போராடுகிறான்
வாழ்க்கையை வாழ வேலை தேடி போராடுகிறான்

                பணியில் அமர்ந்த பின் மணம்முடிக்க போராடுகிறான்
மணவாழ்வில் துணையோடு போராடுகிறான்

குடும்ப பிரச்சினைகளோடு போராட்டம்
குழந்தைகள் சிறப்புக்காக போராட்டம்

முதுமையிலே உடல் உபாதையோடு போரட்டம்
முடிவிலே மரண பயத்தோடு போராட்டம்

பொய்யூரிலிருந்து மெய்யூர் சேரும் வரை
போராட்டம்! போராட்டமே!!

                அந்தகார அதிபதியோடு போராட்டம்
ஆகாய மண்டல ஆவியோடு போராட்டம்
மூன்றரை ஆண்டு இயேசு பூமியில் போராடினார்
மும்முறை வனாந்தரத்தில் பிசாசோடு போராடினார்!

பாருலகில் போராட்டம் உண்டு
பரமர் இயேசு பக்கத்தில் உண்டு
போராடி மண்ணின் ஓட்டம் முடி
பொன் மகுடம் விண்ணில்  சூடி மகிழ்!

Top

 17. புது சிருஷ்டி

புது சிருஷ்டி
பிறந்த குழந்தை
குழந்தை ஜனனம்
குடும்பக் குதூகலம்

பாப்பாவின் பொக்கை வாய் சிரிப்பு
பார்க்கும் மக்கள் மனதில் சிலிர்ப்பு!
பலரையும் கவர்ச்சித்து மகிழ்விக்கும்
பகைவரையும் கவர்ந்து இழுக்கும்

கவர்ச்சிக்கும் புதிய குழந்தை போல
கவர்ந்திழுக்கட்டும் நமது தூய வாழ்க்கை!

பழையவைகள் ஒழியட்டும்
பகைமைகள் தொலையட்டும்

                பால் மணம் வீசுமே
பாலகன் மேனியிலே

களங்கமில்லா ஞானப்பால்  வாசனை நம்மில் வீசட்டும்
கள்ளமில்லா நமது வாழ்வு பாரில் மணம் பரப்பட்டும்
உள்ளமெல்லாம் வசனத்தின் வாசனை பிரவாகிக்கட்டும்
உலகெல்லாம் திருவசனத்தின் ஒளி பிரகாசிக்கட்டும்!

                விவிலியத்தின் வார்த்தைகள் விரிவடையட்டும்
வேத வசனங்கள் உலகில் உலா வரட்டும்!

பாலில் திளைத்து அமைதிப்படும் குழந்தை போல
பாலோடு திருப்திபடும் பாலகன் போல

வேண்டாத ஆசைகளை அழிப்போம்
பேராசைகளை பூண்டோடு ஒழிப்போம்
ஞானப் பாலின் நிறைவில் வாழ்வோம்
வேத வசன வார்த்தையில் மகிழ்வோம்

புதிதாய் பிறந்த குழந்தை போலுமே
கவர்ந்திழுக்கும் தூய வாழ்வு வாழ்ந்து
களங்கமில்லா ஞானப்பால் வாசனை வீச
கர்த்தர் வார்த்தையின் திருப்தியில் திளைத்து
புது சிருஷ்டியாகி தேவனை மகிழ்விப்போம்!

Top

 18. ஆதியாகம இறைவன்

விவிலிய ஆரம்பமே ஆதியாமக நூல்
விரும்பி வாசிக்கத் தூண்டும் வரலாற்று நூல்
வெறுமையாய் இருள் மூடியிருந்த காலத்தில்
வார்த்தையாய் அசைவாடினார் இறைவன் ஞாலத்தில்
கட்டளையே அகிலம் உண்டாக்கியது
வல்லமையே வையகம் வடிவமைத்தது!

ஆதியாகம ஆரம்பம்
அவனியின் ஆரம்பம்
படைப்பின் துவக்கம்
பிரபஞ்ச துவக்கம்
பாவம் புகுந்த பழத்தோட்டம்
சாபம் பிறந்த பதர் கூட்டம்

பரிபூரண பூமி படைத்தார் பரமன்
பாவமில்லா தரணி தயாரித்தார் தேவன்
சுழலும் பூமியை அந்தரத்தில் தொங்க வைத்தார்
சுற்றும் பூச்சக்கரத்தை அசையாது நிறுத்தினார்
கட்டுக் கோப்புடன் கையாண்டார் கோளத்தை
கவனத்துடன் சிருஷ்டித்தார் ககனத்தை!

உருவமில்லா பிம்பம் அல்ல அவர்
உணரப்படா சக்தி அல்ல அவர்
சர்வமும் சந்திக்கும் சர்வவல்லவர் அவர்
சகலமும் உணரும் உருவம் அவர்
பரிதபிக்கிறார் பாவிக்காய்
பிரதிபலிக்கிறார் பாசத்தை

சிறப்பானது அவரது சிந்தனை
சிகரமானது அவரது கரிசனை
நுட்பம் அவர் எண்ணம்
நுணுக்கம் அவர் கைவண்ணம்
நூற்றாண்டுகளாக நிகழ்நத நிகழ்வுகள்
நூதனமான சரித்திர வரலாறுகள்
ஆதியாகம நூலின் நிகழ்ச்சி
ஆர்வமாய் வாசிப்பது மகிழ்ச்சி!

Top

 19. சந்திக்கும் இடம்

தேவனும் மனிதனும் சந்திக்கும் இடம் ஆலயம்
பராபரனும் பாமரனும் சந்திப்பது கர்த்தரின் சந்நிதி
சிருஷ்டிகரும் சிருஷ்டியும் சந்திக்கும் ஸ்தலம் ஜெபவீடு
படைத்தவரும் படைப்பும் சந்திக்கும் பீடம் பிரார்த்தனைக்கூடம்
தேவாலயத்தில் சிமியோன் சந்தித்தார் இயேசு பாலனை
ஜெபாலயத்தில் அன்னாள் சந்தித்தாள் இறை மைந்தனை!

ஆண்டவர் சந்தித்தார் மோசேயை ஆசரிப்புக் கூடாரத்திலே
இறைவன் சந்தித்தார் யோசுவாவை வாசஸ்தலத்திலே
ஆலயத்தில் அன்னாள் அவரை சந்தித்து
அழுது வெகுமதியாக பெற்றாள் மகன் சாமுவேலை!
சாமுவேலை சந்தித்தார் கர்த்தர் ஆலயத்தில்
சகரியாவை சந்தித்தார் தேவ சந்நிதியில்

மக்களை சந்தித்தார் இயேசு தேவாலயத்தில்
மனதுருகி சுகம் அருளினார் பிணியாளிக்கு
தேவன் வசிக்கும் ஸ்தலம் தேவாலயம்
தேடுவோம் அவரை முழங்காலில் ஆராதனை வேளையிலே
மனிதனை சந்திக்க காத்திருக்கிறார் ஆராதனைக் கூடத்தில்
மனித மனதில் இடம் பிடித்து வீற்றிருக்க ஆசிக்கிறார்
ஆலயம் சென்றிடு பரிசுத்த அலங்காரத்தோடு
ஆராதனை ஆரம்பிக்கும் முன் முழந்தாளிடு
ஆயத்தமாகு இறைவனை சந்தித்து தரிசிக்க
ஆசிகள் ஊற்றிடுவார் இயேசு பரிசாக
அருணோதயமாக உதித்து நம்மை சந்தித்தவரை
ஆனந்த சத்தத்தோடு சந்திப்போம் அவர் சந்நிதியிலே!

Top

20. வியர்த்தமாகா வெகுமதி

வருகையை வரவேற்கும் அட்வெந்து காலம்
வரிசையாக ஆரம்பம் கிறிஸ்மஸ் கோலாகலம்
கண்டது தீவிரம் கிறிஸ்மஸ் ஆயத்தம்
களை கட்டியது பண்டிகை ஆனந்தம்
தூங்கா கீத பவனி வழிபாடல்
எங்கும் கீத ஆராதனை வழிபாடு

                பாலன் பிறந்த தினத்துக்குப் பிறகோ…

                அடங்கியது பண்டிகை ஆர்ப்பாட்டம்
அற்றம் கண்டது கிறிஸ்மஸ் ஆர்ப்பரிப்பு

கிறிஸ்மஸ் புத்தாடை பொலிவிழந்தது
கிறிஸ்மஸ் விருந்து மருந்தானது
கிறிஸ்மஸ் பலகாரம் குப்பையிலே
கிறிஸ்மஸ் பரிசுகள் மூலையிலே

வாழ்த்து அட்டைகள் கிழிந்தன
வண்ண விளக்குகள் ஒளி இழந்தன
பலூன்கள் வெடித்து சிதறின
நட்சத்திரம் பரணிலே வீசப்பட்டன

கிறிஸ்மஸ் மரம் சாய்ந்து சருகானது
கிறிஸ்மஸ் குடில் பெட்டிக்குள் முடங்கியது
கிறிஸ்மஸ் இசையை செவி மறந்தது
கிறிஸ்மஸ் நாடகம் விழிகளினின்று நழுவியது
ஆனால்….

சமாதான பிரபு இயேசு
சருவ வல்லவர் தந்த பரிசு
விலையேறப்பெற்ற அந்த சமாதானம்
வியர்த்தமாகாத அரிய வெகுமானம்.

ஈராயிரம் ஆண்டுகள் கடந்தோடினாலும்
இன்னும் நிறைவைத் தருவது கிறிஸ்மஸ் சிறப்பு!
யுகங்கள் பல உருண்டோடினாலும்
இன்னும் நற்செய்தி கிறிஸ்து பிறப்பு!!

Top

  21. வெளிப்பாட்டின் சத்தம்

வெளிப்பாடு வெளியரங்கமாகிறது
வித வித சப்தங்கள் அரங்கேறுகிறது
வேண்டாத ஒலிகள் செவியில் சங்கமமாகிறது
தேவ சத்தத்தை காது அங்கீகரிக்க மறுக்கிறது
மனித கூக்குரலில் மனம் மயங்குகிறது
தேவ குரலை இதயம் ஏற்க தயங்குகிறது!

விண்ணில் வீற்றிருப்பவர் வெளிப்பட
மண்ணில் வெளிப்படுத்தினார் காபிரியேல்!
பயப்படாதே என்ற சத்தம் செவியை தாக்கியதும்
கீழ்ப்படிந்த மரியாள் "பாக்கியவதி" யானாள்
"ஐயப்படாதே" என்ற வார்த்தை காதில் விழுந்ததும்
கீழ்ப்படிந்த யோசேப்பு "நீதிமான்" ஆனான்!

தேவ சத்தத்தை உற்று கவனி
மனித குரலுக்கு சற்று நிதானி
தேவ வெளிப்பாடு பெற்று தியானி
வருவார் இயேசு இதயத்தில் பவனி
வெற்றி சிறப்பாய் அவனியில்
வெளிச்சம் தரிசிப்பாய் விண்ணினில்!

இறைவனின் மெல்லிய ஒலி மட்டும்
சிறைப்பிடித்து செவியை வருடட்டும்!
கிறிஸ்துவின் பாருலக வெளிப்பாட்டின் சத்தம்
கிறிஸ்மஸ் விழாவாக படைத்தது சரித்திரம்!
இனிமை தழுவட்டும் கிறிஸ்மஸ் பண்டிகை
இதழ்களில் தவழட்டும் சந்தோஷப் புன்னகை!

Top

 22. மெய் தொட்ட வம்ச வரலாறு

புனிதவழி மனிதனுக்குக் காட்டிட தேவன் தந்த பரிசு
பூவில் பாலனாய் உதித்த இறை மைந்தன் இயேசு!
பாரோரை பரத்தினில் சேர்த்திட பாரினில் பிறந்த
பரிசுத்த தேவன் பாவிகள் வம்சாவழி வந்தார்!

எத்தன் யாக்கோபு வம்ச வரலாறில்
தப்பான தொடர்பு கொண்ட
தாமார் - யூதா பெற்ற பாரேஸ் பரம்பரையில்
தவறான ராகாப்-சல்மோன் சந்ததியில்
தாவீதுக்கு உரியாவின் மனைவி பெற்ற
தனயன் ராஜா சாலொமோன் சரிதையில்
பரிசுத்த பீடம் ஏறி குஷ்டம்
பரிசாகப் பெற்ற உசியாவின் உறவில்
பாவத்தில் ஊறிய மனாசே போன்ற
பாவிகள் பட்டியலில் இணைந்தார் பரன் இயேசு!

பாவ வம்சாவழி வந்தவர் ஜீவ வழியின் சிற்பியானார்
புனித பாதை திறக்க திருரத்தம் மொத்தமும் சிந்தினார்
மனிதனின் ஆத்ம தாகம் தீர்க்க வற்றாத நீரூற்றானார்
வழி, சத்தியம், ஜீவனும் தாமேயென நம்மைத் தேற்றினார்
உறவு கொண்டார் உலகினிலே நட்சத்திரமாக
உருவில் மகிழ்ந்தார் மாந்தரோடு பவித்ரமாக
பொய்யல்ல கிறிஸ்துவின் கோத்திர வரலாறு
மெய் தொட்டு வரைந்த வம்ச வரலாறு
இல்லம் குறைவடையாது கொண்டாடுவோம் பண்டிகை
இதயம் கறைபடாது படைத்திடுவோம் காணிக்கை!

Top

23. தரிசித்த சிசு

எந்தன் வயது அறுபது இன்று
மந்தை மேய்ப்பவன் நான் அன்று
சந்தித்தேன் ஒரு மாமனிதரை சற்று முன்பு
சாந்தம் தவழும் வதனத்தில் சிந்தியது அன்பு
காந்தமாக இழுக்கும் கண்களில் கசிந்தது கனிவு
கவர்ந்தது என்னை அவரது அருட்பொழிவு
யார் அவர்?
அதிசயங்களின் ஊற்று அவர்
அற்புதங்களின் சான்று அவர்
அசுத்தாவிகள் அரண்டோடின
அற்ப ஆகாரம் அநேகருக்கு விருந்தானது
சக்தியான ஒரு வார்த்தை அவர் உதிர்க்க
சர்வாங்க சுகம் சன்மானமானது
யார் அவர்?
சிந்தையில் சம்பவங்கள் மோதின
தந்தையோடு முப்பதாண்டுகள் முன்பு…
மந்தை காத்தோம் நடு இராவிலே
எம்மை சுற்றி பிரகாசித்தது ஒளிக் கீற்று…
"உலகுக்கு அறிவிக்கிறேன் சந்தோஷ நற்செய்தி
உன்னதத்தில் கீர்த்தி, அவனியில் அமைதி
தாவீதின் வேரிலே தனியொரு கொழுந்தாய்
துளிர்த்திருக்கிறார் கிறிஸ்து என்னும இரட்சகர்
துணிகளில் சுற்றிய கன்னிமரி மகவை
முன்னணையில் காண்பதுவே உமக்கடையாளம்"

தூதர் குழு திரளாய் இறங்கின மண்ணிலே
துதி பாடி பறை சாற்றி பறந்தன விண்ணிலே
துள்ளிக் குதித்து தேடி ஓடினோம் விரைந்து
துய்ய பாலனை தரிசித்து அறிவித்தோம் புகழ்ந்து!

அன்று பெத்தலை தொழுவில் தரிசித்த சிசு
இன்று சற்குருவாய் சந்திக்கும் பரிசுத்தர் இயேசு!
ஆம்! இவர்தான் அந்த இயேசு!

Top

24. 365 புதிய பக்கங்கள்

புதிய பக்கங்கள் 365 உடன் பளபளக்கும்
புத்தகமாம் புத்தாண்டே வருகவே!
பழுதற்ற பசுமையான அதன் பக்கங்கள்
பழுதடையாது பராமரித்திடும் பராபரனே!

நூலின் இதழ்களை நான்
நுகர்ந்து மணக்கச் செய்யும்
நூதனமான அதன் வாசனை
நிகழ்த்தட்டும் நாளும் சாதனை
சுருளின் வரிகளில் உமது
சுவடுகளின் தடம் பதித்தருளும்
அழுக்கற்ற சுத்தமான பக்கங்கள்
அழுக்காறு அண்டாது அலங்கரியும்

வண்ணந் தெளித்த தாளின் இன்சுவை
எண்ணங்களின் திறவு கோலாகட்டும்
வார்த்தையும் நமது செய்கையும் இயேசுவை
ஏற்று பணிந்திட தூண்டு கோலாகட்டும்
ஏடுகளில் பதியும் எழுத்துக்கள்
எழுப்புதலின் அக்கினியாக எரியட்டும்
நாட்காட்டியின் ஏடு உதிர உதிர
நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்!

365 இதழ்கள் கோர்த்த புதிய மலரிலே
365 சூரியோதயம் பார்த்து பிரார்த்தித்து விழிப்போம்
365 அஸ்தமனம் ரசித்து துதித்து துயில்வோம்
365 இதழ்களும் ஒவ்வொன்றாக உதிருமே
365 தாள்களுடன் புதிய நாட்காட்டி பளபளக்குமே
365 இதழ்களும் ஒவ்வொன்றாக மொட்டவிழ்க்குமே!

பற்றிடு இயேசுவை 365 தினங்களும்
பெற்றிடு ஆசிகள் 365 தினங்களும்!


Top

25. இயேசுவே உம் கிருபை வேண்டும்

சந்தித்திருப்பது இனிய புத்தாண்டு
சஞ்சலங்களில தேவ கிருபையுண்டு
சத்தங்கள், சண்டைகள் செவிடாக்கும் உலகினிலே
சந்தோஷம், சமாதானம் சிறகடித்து சுற்றிவர
இயேசுவே! உம் கிருபை வேண்டும்!

பிரவேசித்திருப்பது ஓர் புதிய வருடம்
பிரச்சினைகளோ உள்ளத்தை நெருடும்
புதிய காலைகளை ஜெபித்து வரவேற்றிட
புத்தியோடு காலங்களை கடந்து வென்றிட
இயேசுவே! உம் கிருபை வேண்டும்!

பொறாமை, பகைமை விளையாடும் வையகமதில்
பொறுமை, பரிசுத்தம் வாழ்வின் வனப்பாகிட
பிள்ளைகள் தடம்மாறி சேற்றில் உழன்றிடாது
கர்ப்பக் கனிகள் ஒலிவக் கன்றுகளாக ஒங்கிட
இயேசுவே! உம் கிருபை வேண்டும்!

விவாக முறிவு சந்தி சிரிக்கும் இந்நாட்களில்
விசுவாசத் தம்பதியினராய் நிறைவாய் வாழ்ந்திட
வெளிச்சமற்ற உலகில் ஒளிரும் விளக்காக
வெற்றிப் படி ஏறி விருது பெற்று வாகை சூடிட
இயேசுவே! உம் கிருபை வேண்டும்!

தாவி விதைகள் கல் முள்ளில் விழுந்திடாது
தூவிய வித்து விளை நிலத்தில் புதைந்து வளர்ந்து
அறுவடை அறுபது நூறாக செழித்தோங்க
அறுப்பின் ஆட்கள் பணிக்களத்தில் அணிதிரள
இயேசுவே! உம் கிருபை வேண்டும்!

புதிய வருட பணிகள், முதலீடு, முயற்சிகளில்
புது மைல் கல் காண முழங்காலை முதலீடாக்கி
முடிந்த ஆண்டு பரிசளித்த சன்மானங்களைவிட
புதிய ஆண்டில் ஈசாக்கின் நூறுமடங்கு ஆசி சொந்தமாக
இயேசுவே! உம் கிருபை வேண்டும்!

இயேசு: பற்றிக்கொள் என் கரத்தை
போதும் உனக்கு என் கிருபை!

Top

 26. புது வருஷம் பொக்கிஷம்

புது வருஷம் ஒரு பொக்கிஷம்
புத்தாண்டு மனுஷனுக்கு விசேஷம்
பூரண வருட மகிழ்ச்சி உள்ளங்களில்
புதிய நாளை வரவேற்போம் முழங்கால்களில்

வருடம் ஒன்று கரைந்தது நிமிடமாக
வாழ்ந்த வருடம் சாதித்தோமா மிகுதியாக?
வந்தது சாதிப்பதற்குள் வருட இறுதி
வரும் ஆண்டு சாதிக்க எடுப்போம் உறுதி

வாழ்வின் அடுத்த நிமிடம் நமது கையிலில்லை
வாழ்க்கை பயணச்சீட்டு நம்மிடமில்லை
மன்றாடுவோம் முழங்காலை மூலதனமாக்கி
ஊன்றுவோம் ஆழமாக விசுவாச நங்கூரத்தை

தேவ கோலும் தடியும் பாதை காட்டட்டும்
இயேசுவின் மெல்லிய குரல் செவியை திறக்கட்டும்
விசாலமாகட்டும் நமது கூடாரத்து முளைகள்
விரிவாகட்டும் நமது வாசஸ்தலத்து திரைகள்

காத்திருக்காமல் ஓடும் காலங்களை
கர்த்தர் பணியில் முதலீடு செய்வோம்
காத்து காத்து விரயமாகும் மணித்துளிகளை
கிரயமாக்கி கனிகள் குலுங்கச் செய்வோம்!

காணுவோம் ஓரு ஆண்டு மீண்டும்
கடப்போம் ஒரு வருடம் மறுபடியும்

காலை தோறும் காத்திருப்பேன் உமது பாதமே
கற்றுத்தாரும் வேதம் என் நேச தீபமே!

Top

 27. சுற்றுப்பயணம்

ஆண்டுக்கொரு முறை பூமியின் சுற்றுப்பயணம்
அந்தரத்தில் முடிந்து தொடர்கிறது பூமி பயணம்
மறைகிறது கடந்து வந்த காலங்கள்
புலர்கிறது புத்தாண்டு காலங்கள்
ஒன்றின் முடிவே மற்றொன்றின் ஆரம்பம்
இருளின் முடிவிலே விடியலின் ஆனந்தம்
விண்கோள்களின் சுற்றுப்பயணம்
மண்ணில் காலங்கள் மாறும் கோலம்!

இன்பமும் துன்பமும் கண்ணாமூச்சி ஆடுவதே
இவ்வுலக யாத்திரையில் மனிதனின் சுற்றுப்பயணம்
இலட்சியங்கள் வானமாகட்டும் சுழலும் உலகிலே
இலக்குகளை தொட்டு விடு சுற்றுலாவிலே
ஆண்டாண்டு வாழப்போவதில்லை நாம் - ஆனால்
அழைக்கப்படுகிறோம் ஒவ்வொரு நாளும் வாழ
வாழ்ந்தாக வேண்டும் அனுதினம்
வாழும் அந்த தினம் புதிய தினம்!

பூகம்பம், புயல், சூறாவளி, சுனாமியிலே
பூரண பாதுகாவலர் இயேசு சுவாமியே
புறப்பட்டு எட்டெடுத்து வைக்கும் புத்தாண்டினில்
புது இதயம் சுமந்து படைப்போம் புதுமைகள்
பூமியின் சுற்றுப்பயணத்தில்
புலர்ந்திடும் புத்தாண்டே- நீ
இயேசுவை சுமந்து தொடர்ந்திடு பயணம்
இன்ப உலாவாகட்டும் உன் சுற்றுப்பயணம்!

Top

 28. வாழ்க தாய் நாடே

சிங்கார தேசியக் கொடி ஏற்றிடுவாய்
மங்காத இயேசு புகழ் போற்றிடுவாய்
எங்கும் சத்தியம் நித்தியமாகட்டும்
பொங்கும் சந்தோஷம் நிலைவரமாகட்டும்

கொண்டாட்டம் சுதந்திர விழாவுக்காக மட்டுமல்ல
கொடி ஏற்றம் இனிப்பு வழங்குவதற்கு மட்டுமல்ல
கொலை பாதகம் விலங்கிடப்பட வேண்டும்
கொடிய பழக்கம் விலகிட வேண்டும்

சுயாதீனமற்றுக் கிடந்த இந்திய மக்கள்
சுதந்திரத்தை சொந்தமாக்க சிந்தினர் குருதி
வெள்ளையரிடம் வாங்கியது சுதந்திரம்
கொள்ளையரிடம் இழந்தது சுயாதீனம்

அடிமை இந்தியா சுதந்திரம் கேட்டது அன்று
சுதந்திர இந்தியா சுவிசேஷம் கேட்கிறது இன்று
சுவிசேஷம் கேட்பவன் ஜீவனை சுதந்தரிப்பான்
சுதந்திரவாளியாகி இயேசுவின் புத்திரனாவான்
;
பரந்து விரிந்த பாரத நாடு
பரமர் இயேசு பாதம் நாடு
நற்செய்தி விருட்சம் நட்டிடு
நற்சாட்சி வையகமதில் நாட்டிடு

அன்னை பாரத நாடே! பரவட்டும் உன் கீர்த்தி
அருள் நாதர் பணி பிரவாகிக்கட்டும் நேர்த்தி
வாழ்ந்திடுவாய் தாய் நாடே
மகிழ்ந்திடுவாய் மெய் தேவனோடே!

Top

29. மூவர்ண கொடி ஏற்றிடு

பாருக்குள் சிறந்த எம் பாரத நாடு
பரமர் இயேசு புகழ் தினம் பாடு
மூடப் பழக்கங்கள் விலங்கிடப் பட்டு
மூவர்ணக் கொடி ஏற்றிக் கரம் கொட்டு
அந்நியர் ஆளுகை தந்தது விடுதலை
ஆனந்த சுதந்திர தினம் கொடுத்தது விடுமுறை
அனுபவிக்கிறோம் அடிமைத் தளையினின்று விடுதலை
அடைந்தோமா அஞ்ஞானத்திலிருந்து விடுதலை?
நாற்பத்தேழுக்கு முன்பு பொங்கிய தேசப்பற்று
நாளுக்கு நாள் மங்கி மாண்டு போயிற்று
நாற்பத்தேழாம் ஆண்டு முப்பத்து மூன்று கோடி
நாட்டில் இன்று மாந்தர் நூற்றுப்பத்திற்கு மேல்
சுழன்றோடிற்று பல ஆண்டுகள்
கழன்றோடிற்றா பாவக்கட்டுகளின் அடிமை நிலை?

பெருகிற்று வெள்ளமாய் ஜனத்தொகை
ஓடிற்று இரத்த ஆறாய் இனப்பகை
விடுவிக்க வந்தவரை ஏற்கவில்லை தேசம்
விடுதலை நாயகரை விலக்கிய நாடு நாசம்
இயேசுவால் நாமடைந்த ஆன்மீக விடுதலை
இந்திய ஜனத்துக்கு அறிவிப்பது நமது வேலை
பாவத்தில் விழுந்து கிடக்கும் மனிதனை
பரிசுத்தத்தில் எழுந்து நிற்க வைப்போம்
மனச்சாட்சி செத்துக் கிடக்கும் இதயத்தை
மறுபடியும் உயிரூட்ட முயலுவோம்
இனிதான இயேசுவை பறை சாற்றுவோம்
மனிதனை மனிதனாக மாற்றுவோம்
வாழ்க எம் பாரத தேசமே
வளர்க இயேசுவில் உன் நேசமே!

Top

30. தேசமே இயேசுவோடு கரங்கோர்த்திடு

பொன்னாடு பாரதநாடு நம்நாடு
பெயரும் புகழும் பெருகி மகிழ்ந்தாடு
விடுதலை விழா ஆனந்தமாய் கொண்டாடு
விடுதலை நாயகர் இயேசுவின் பண்பாடு
சட்டம் ஒழுங்கு கடைப்பிடித்திடு
சரித்திரம் படைத்து கொடி ஏற்றிடு
இன மத பேதம் விட்டொழித்திடு
இரட்சகர் இயேசு பாதம் பற்றிடு!

சமாதானம் தேசத்தின் அஸ்திபாரமாகட்டும்
சமத்துவம் நாட்டைத் தூணாகத் தாங்கட்டும்
விசுவாச பாய்மரம் உந்துவிசையாகட்டும்
விரோதிகள் மோதினாலும் இயேசுவே சுக்கானாகட்டும்
நேரத்தை விரயமாக்காது நேர்மையாய் உழைத்திடு
விரயமான காலம் விரும்பினாலும் திரும்ப வராது
இலக்குகள் தேவை வெற்றி பயணத்துக்கு
இலட்சியங்களை இலக்காக்கி முன்னேறு தேசமே!

காற்றில் அலைவுபடும் தீபத்தை
கரங்கள் பொத்திக் காப்பது போல
நாட்டில் ஏற்றிடும் சுவிசேஷ தீபத்தை
நல்லிணக்கம் பேணி சுடர்வீசச் செய்!
சுயநல பகைமை விலங்கினை அறுத்தெறிந்திடு
சுதந்திரவாளியாகிடு இயேசுவின் அரசுக்கு
வெற்றி இலக்கைத் தொட்டு அரங்கேறிடு
வேந்தர் இயேசுவோடு கரங்கோர்த்திடு!

Top

31. விடுதலை நாயகர் இயேசு

இமயத்தில் பனிமூடிக் கிடக்கும்
இயற்கை எழில் கொஞ்சும் தேசமிது
குமரியில் முக்கடல் சங்கமிக்கும்
கவின் மிகு சூரியோதய தேசமிது
தத்துவ ஞானம் கணனி அறிவு
மெத்தவும் மேன்மை அணிந்த பாரதமிது!

இந்திய தேசமே உன் புகழ் உச்சாணியிலே
சிந்திய திருரத்தமே மன்னிப்பின் அச்சாணியே
சந்திக்கட்டும் இந்தியரை சிலுவையின் அன்பு
சமாதான வாய்க்கால் கழுவட்டும் வம்பு
சத்தியர் இயேசுவை பறைசாற்றிடு
நித்தமும் நற்செய்தி தீபம் ஏற்றிடு!

செயலில் வேண்டும் தூய்மை
சொல்லில் வேண்டும் வாய்மை
துண்டாடும் பகை பயங்கரவாதம்
கூண்டோடு மறைய மன்றாடுவோம்
இலட்சியத்தின் இலக்காகட்டும் இந்தியா
இலக்குகளின் வானமாகட்டும்  மாபாரதம்!

இலச்சை மிகும் இச்சை வாழ்வுக்கு விலங்கிடு
இயேசுவே இரட்சகரென வெற்றி முரசு கொட்டு
பொன்நாடு பாரத நாடு மீட்பரை நாடு
பெயரும புகழோடு மேன்மை நாடு
விடுதலை விழா இனிதே கொண்டாடு
விடுதலை நாயகர் இயேசுவின் பண் பாடு!

Top

32. மனைவியின் விலை

சிறந்த குணசாலி மனைவியின் விலை
மிகுந்த விலை, முத்துக்களின் நிலை
சுறுசுறுப்பின் சொரூபம் அவள்
முறுமுறுப்பு தொடுவதில்லை அவள்
வீட்டின் அஸ்திபாரம் அவள்
தோட்டத்து வனப்பு அவள்
வயல் வெளிகளை சொத்தாக்குகிறாள்
வரையாடுகளை சொந்தமாக்குகிறாள்
ஆகாரத்தில் சுவை கூட்டுவது அவளது வேலை
ஆடைகள் அலங்கரிப்பது அவளது கலை
வேலைக்காரிக்கு படியளக்கிறாள் மனமுவந்து
வறியவருக்கு பரிசளிக்கிறாள் கரம் திறந்து!

துணையாக வருகிறாள் மனிதனுக்கு
தூணாக தாங்குகிறாள் மனைவியாக
புருஷன் இதயம் அவளை நம்பும்
கணவன் சம்பத்து சிகரம் காணும்
புருஷனுக்கு அவளால் பெருமை
கணவனை தீண்டாது தீமை
நாவிலே திருவசனம் நர்த்தனமாடும்
வாயிலே இறைதுதி இசைபாடும்
ஏற்றுவாள் நற்செய்தி தீபம்
ஏறெடுப்பாள் குடும்ப ஜெபம்
திடவிசுவாசத்தின் குடியிருப்பு
தியாகத்தின் கொலு மண்டபம்
தினம் தேடுவாள் தேவபாதம்
தியானம் அவளது இன்னிசை கீதம்!
நிகழ்காலம் தரும் அன்பளிப்பு புகழ்ச்சி
வருங்காலம் அவளுக்கு தரும் பரிசு மகிழ்ச்சி
கர்ப்பப் பிறப்புகளுக்கு அன்பின் ஊற்று
கணவனுக்கு அவள் மதிப்புயர்ந்த முத்து!

Top

33. மனைவியின் மன்றாட்டு

தேவனே!
வந்தேன் நான் உம்மிடம் கணவருக்காக மன்றாட
வழங்கிய கணவருக்காக வணங்குகிறேன் நன்றியோடு
வேண்டுகிறேன் புதுமனுஷியாக நான் மாற வேண்டுமென
வேண்டும் எனது வாஞ்சைக்கு வடிவம் தந்திடும்!

மகளே!
பூரணர் அல்ல பதி சதி இருவருமே
பூரணமில்லா புருஷனை உள்ளபடியே ஏற்றுக்கொள்
இனிய இல்வாழ்க்கையின் முக்கியம்
இணைந்து பிரார்த்திக்கும் குடும்ப ஐக்கியம்
முழங்காலில் நிறைவேற்றிடு உன் பொறுப்பு
முறுமுறுத்து வாதாடாது தந்திடு ஒத்துழைப்பு
உள்ளம் உடைந்தால் உறவு நொறுங்கிடும்
கள்ளமில்லா உள்ளம் கணவனுக்கு அர்ப்பணி!

புரிந்துகொள் கணவனின் கனவுகள்
பகிர்ந்து மகிழ் புருஷனின் நினைவுகள்
புருஷனிடம் பாராட்டு பூரண அன்பு
புதுமை படைத்திடும் பெண் நீயென நம்பு
உயிர்ப்பிக்கட்டும் உன்னை உன்னத வல்லமை
உறவுப்பாலம் உறுதியாக்கி உருவாக்கிடு ஒற்றுமை
பரமர் இயேசுவே உன் வீட்டின் மகிமை
பக்தி விருத்தி கட்டட்டும் குடும்ப மேன்மை!

இயேசுவே!
பிரச்சினைகள் புரிந்துகொள்ள கற்றுத்தாரும்
பிரயோஜன பாத்திரமாக மாற்றியருளும்
புருஷனின் புதுக் கண்கள் என்னைக் காணவேண்டும்
புதுநோக்கு என்னை புதுமையாக தாக்க வேண்டும்
புது இரக்கம் என்னை இதமாக வருடட்டும்
புது கரிசனை என்னை சுற்றி வட்டமிடட்டும்
புத்தம் புது கணவராக அவர் ஜொலிக்கட்டும்
புது மனைவி தாரும் என் கணவருக்கு - அந்த
புது மனைவி நானாகவே இருக்கட்டும்!
இயேசுவின் நாமத்தில் ஆமென்!!

Top

34. பிந்தியவர் முந்தினர்

திராட்சை தோட்ட வேலைக்கு
தேவை வேலையாள் முதலாளிக்கு
காலை வேளை கூலி பேசி
வேலை ஏற்றனர் கூலிக்காரர் சிலர்

மூன்றாம் மணிமுதல் பதினோராம் மணிவரை
அழைத்தான் எஜமான் பணியற்று நிற்பவரை
அமர்த்தினான் கூலிபேசாது பணியினில் சிலரை
அளித்தான் மாலையில் கூலி ஆளுக்கொரு பணம்
முந்தியவர், பிந்தியவர் பெற்றது சமமான சம்பளமே
முந்திய எங்களது உழைப்பின் ஊதியம் ஒரு பணமா?
முறுமுறுத்து அதிகம் கேட்டனர் கூலி பேசி வந்தவர்

பிந்தியவனுக்குக் கொடுப்பது என் பிரியம்
பேரம் பேசி சம்மதித்தாய்  ஒரு பணத்துக்கு
அழைப்பை ஏற்று பணி செய்தனர் பிந்தியவர்
அநியாயம் ஏதும் செய்யவில்லை நான் உனக்கு

எஜமானனின் கூற்று-
என்னுடையதை விரும்பியபடி கொடுப்பது என் இஷ்டம்!

திராட்சத் தோட்ட எஜமான் தேவன்
திருப்பணி புரிய அழைக்கிறார் சிலரை
சம்பளம் பேசி வேலை செய்பவர் பலர்
சம்மதித்து பணிக்கு அர்ப்பணிப்பவர் சிலர்
முந்துபவர் பிந்துவதும், பிந்துபவர் முந்துவதும்
முதலாளியின் விருப்பம்!

தழும்புகள் உண்டு தியாகமான வாழ்க்கையில்
வடுக்கள் உண்டு அர்ப்பணமான ஊழியத்தில்
மனமுவந்து எஜமான் கொடுப்பதை
மனமகிழ்ந்து ஏற்றுக் கொள்வோம்
முணுமுணுக்காது பணி புரிவோம்
முறுமுறுக்காது கூலி பெறுவோம்
எஜமானின் சித்தப்படி!

Top

35. யோசேப்பு கனி தரும் செடி

யோசேப்பு கனி தரும் செடி- இது
யாக்கோபு தூவிய ஆசீர்வாத வித்து!

அடிமையாக எகிப்தில் விற்கப்பட்ட யோசேப்பு
ஆண்டவர் சித்தம் நிறைவேற பொறுமை காத்தான்-
அவன் நீடிய பொறுமையின் கனிதரும் செடி!

விசுவாச வேர் பற்றிப்பிடித்த யோசேப்பு-
விசுவாசக் கனி மணக்கும் செடி!

இச்சித்த எஜமாட்டிக்கு இணங்காத யோசேப்பு
இச்சையடக்கம் பரிமளிக்கும் கனிதரும செடி!

தானியக் களஞ்சியம் திறந்து வழங்கிய யோசேப்பு-
தயவு நிரம்பி வழியும் கனி தரும் செடி!

பஞ்சத்தில் தஞ்சமென வந்தவரை போஷித்த யோசேப்பு-
சாந்தம் ததும்பும் கனி தரும் செடி!

சதி செய்த சகோதரரை கட்டித் தழுவிய யோசேப்பு-
சமாதானக் கனி சங்கமிக்கும் செடி!

சகோதரருடன் சிரித்து ரசித்து புசித்த யோசேப்பு-
சந்தோஷம் பொங்கும் கனிதரும் செடி!

சொந்த பந்தங்களை ஆதரித்து தன்னுடன் வாழவைத்த யோசேப்பு
அன்பு  அரங்கேறும் கனிதரும் செடி!

சிறந்த குணங்களால் தன்னை அலங்கரித்த யோசேப்பு-
நற்குண கனி குலுங்கும் செடி

ஆவியின் கனி ஒன்பதும் கொத்தாக கனிந்த யோசேப்பை
இறைவார்த்தை புடமிட்டு பொன்னாக ஒளிரச் செய்தது!

ஆவியின் கனி சிந்தும் தீஞ்சுவை குணங்கள் அணிந்து
இயேசுவுக்கு பரிசுத்த இதயம் பரிசளிப்போம் இச்சைகள் களைந்து!

Top

36. பத்மு தீவினிலே

பத்மு தீவினிலே தனிமை
பரிசுத்த யோவானின் நிலைமை
பகிர்ந்தளிக்கிறார் யோவான்
பத்மு தீவு தரிசனங்களை!

கடற்கரை மணலிலே பாதம் புதைய
கால் நனைய நடப்பது இனிமை
காலமெலாம் கடற்கரை சூழலிலே
கட்டுப்பட்டுக் கிடப்பது கொடுமை
சிறைவாசம் போன்று பத்மு தீவிலே
சில காலம் சஞ்சரித்தார் யோவான்
தரிசனம் வெளிப்படுத்தினார் தேவன்
தாகத்துடன் விவரிக்கிறார் யோவான்!

ஏழு குத்து விளக்குகள் மத்தியில் உலவுகிறவர்
ஏழு நட்சத்திரங்கள் கரத்தில் ஏந்தியவர்
உலைக்களத்தில் காய்ந்த ஒளிரும் பாதம்
உறைந்த மழையின் வெண் பஞ்சு சிரசு
வதனம் சூரிய பிரகாசம்
விழிகள் அக்கினி பந்தம்
வாயில் கருக்கான பட்டயம்
மார்பில் பொற் கச்சை
ஆதியும் அந்தமும் அவரே
அல்பாவும் ஓமெகாவும் அவரே
முந்தினவரும் பிந்தினவரும் அவரே
மூவுலகை ஆள்பவரும் அவரே!

ஆட்டுக் குட்டியானவரது மணவிழா மகிழ்ச்சி
ஆயிரம் ஆண்டு கிறிஸ்துவின் அரசாட்சி
இலவசமாக இயேசு தரும் ஜீவ தண்ணீர் பரிசு
இரட்சிப்பு சத்தியம் அணிந்த நித்திய அரசு
புதிய பூமி என்பது நெகிழ்ச்சியல்ல
பூரணமாக நிறைவேறும் நிகழ்ச்சியே
பயங்கரத்தை பறைசாற்றும் நினைவு
பத்மு தீவினிலே யோவானின் கனவு!

Top

37. சிலுவையிலறையாதே இயேசுவை மறுபடியும்

சிலுவையில் அறைந்தான் இயேசுவை
காசாசையால் காட்டிக் கொடுத்த யூதாசு!
வாரும் நாமும் சிலுவையிலறைவோம் இயேசுவை
பண ஆசையால் பரிதானம் வாங்கிய கரங்களால்!

சிலுவையில் அறைந்தான் இயேசுவை
தண்டனைக்கு பயந்து நேசரை மறுதலித்த பேதுரு!
வாரும் நாமும் சிலுவையிலறைவோம் இயேசுவை
தப்புகளை துடுப்பாக்கி இரட்சகரை தூர வீசிய இதயத்தினால்!

சிலுவையிலறைந்தனர் பரிசேயர் பொறாமையினால்
வையகமே இயேசுவின் பின் செல்கிறதேயென பொறுமி!
சிலுவையிலறைவோம் நாமும் இயேசுவை
சிநேகிதன் மீது கொண்ட பொறாமை என்ற வாரினால்!

கரங்களைக் கழுவி ஒப்புவித்தான் பிலாத்து
தரங்கெட்டு பதவி மேல் ஆசை வைத்து!
வாரும் மறுபடியும் சிலுவையிலறைவோம் இயேசுவை
பதவி மோகங்கொண்டு, சட்டவிரோத சாட்டையினால்!

பணத்திமிர் பந்தாக்களை புதைத்திடு
பண்புள்ள மனிதனாக உயிர்த்தெழு!
வன்முறை, லஞ்சம், ஊழல் புதைத்திடு
நன்மை செய்யும் நண்பனாக உயிர்த்தெழு!

சுயநலம் உடைவது சிலுவையில் மட்டுமே- அது
சாம்பலாகும் ஸ்தலம் கல்வாரி மேட்டிலே!
மறுபடியும் சிலுவையிலறையாதே சத்தியர் இயேசுவை
மனந்திரும்பி வெகுமதியாகப் பெற்றிடு நித்திய அரசை!

Top

38. வலப்பக்க கள்ளனின் வரலாறு

கொல்கதா மேட்டினில் ஈன சிலுவையில் இயேசு!
கபால ஸ்தலத்தில் கயவர் நடுவினில் இறைவன்!
இரு கள்ளர் இயேசுவின் இரு பக்கம்
இருவருமே குற்றவாளி வர்க்கம்
தாக்கினான் ஒருவன் இயேசுவை
நோக்கினான் மற்றவன் இரட்சகரை!

கள்ளன் ஒருவனின் விசுவாசக் கண் திறக்கப்பட்டது
கண்டு கொண்டான் இயேசுவே பரதீசு திறவுகோலென்று
மரணத்தருவாயில் மன்னிக்கக் கெஞ்சினான்
மன்னிப்புடன் மறுவாழ்வு அவனுக்கு வெகுமதியாயிற்று
மரண வேளையிலும் பாவிகள் நடுவில் தொங்கியவர்
மரணம் நம்மைத் தழுவும் வேளை தம் கரத்தில் தாங்குவார்!

சபித்தவன் தேவ சமுகம் விலகினான்
சக திருடன் தேவ சகாயம் விரும்பினான்
இகழ்ந்த கள்ளன் இழந்தான் இரட்சிப்பு
இதயம் நொறுங்கியவன் அடைந்தான் மீட்பு
இரட்டுடுத்தி சாம்பலணிந்து இயேசுவை நோக்கிப்பார்
இரட்சிப்பு ஆடையணிவித்து உன்னை அலங்கரிப்பார்!

மறுபக்க கள்ளனின் வரலாறு…
காலை வேளை இயேசுவுக்கு வெளியே இருந்தான்
மதிய வேளை இயேசுவுடன் இசைந்தான்
மாலை வேளை இயேசுவோடுகூட இணைந்தான்
நாம்... இயேசுவுக்கு வெளியே இருக்கிறோமா?
இயேசுவோடு இசைந்திருக்கிறோமா?

Top

39. எனக்காய் நீர்

சீர்கெட்டு அலைந்ததோ நான்
சிலுவையில் தொங்கியதோ நீர்
மாபெரும் குற்றவாளி நான்
மரண தண்டனை பெற்றதோ நீர்!

பாவம் சுமந்தேன் நான்
சாபம் ஏற்றீர் நீர்
பாதை தவறினேன் நான்
வாதை யுற்றீர் நீர்

பெருமைக்கு அடிமையானேன் நான்
வெறுமை உடம்பானீர் நீர்
பகைமை பருகினேன்  நான்
பாடுகளின் உருவானீர் நீர்

மூர்க்கமாக ஆடியது நான்
முள்முடி சூடியது நீர்
தப்பு செய்து ஒடியது நான்
துப்பப்பட்டு வாடியது நீர்

கோபம் கொட்டினேன் நான்
காயம் பட்டீர் எனக்காய் நீர்
கயமை கடைபிடித்தேன்  நான்
கசையடி வாங்கினீர் எனக்காய் நீர்

மாசு பட்டேன் நான்
மனம் நொந்தீர் நீர்
சண்டை அரங்கேற்றினேன் நான்
சவுக்கடியின் அரங்கமானீர் நீர்

அகங்காரத்தின் மொத்த குத்தகை நானே
அலங்கோலத்தின் ஆளுகையானீர் நீரோ!

திருரத்தத் துளிகள் சிந்தட்டும் என்மீது
திருக்குள்ள உள்ளமதை தூயதாக்கட்டும் அது!

எல்லாம் சகித்தீர் எனக்காய் நீர்
என்ன சாதித்தேன் உமக்காய் நான்?
உம்மை தந்தீர் எனக்கு நீர்
என்ன தந்தேன் உமக்கு நான்
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே!

Top

40. துளிர்க்கட்டும் தெய்வீக குணம்.

வருடா வருடம் வரும் லெந்து நாட்கள்
வழக்கம் போல வந்தது இந்த வருடமும்
வாரந்தோறும் உயிர் மீட்சிக் கூட்டங்கள்
பவனியாக குதூகலித்தது குருத்தோலை ஞாயிறு
பரிசுத்த வாரம் அனுசரித்தது பாரம்பரிய மனம்
பாங்காக ஆராதனை ஆலயத்தில் தினம் தினம்
வியாழனிரவினில் நினைவு கூர்ந்தோம் திருவிருந்து
வெள்ளியாம் புனித தினம் மும்மணி தியானம்
வார இறுதி எந்த ஆசரிப்புமில்லா ஆயத்த சனி நாள்
வாரத்தின் முதலாம் நாள் இயேசு உயிர்த்த திருநாள்!

புலரா விடியலில் மலர் அலங்காரம் ஆலயத்தில்
புத்தாடையுடன் அலை மோதும் கூட்டம் ஆராதனையில்
இந்நாளில் ஏசு நாதர் உயிர்த்தார் என கம்பீர கீதம்
அல்லேலூயா ஆர்ப்பரிக்கும் திருவிருந்து வழிபாடு
மகிழ்வுடன் பகிர்ந்திடும்  இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்
மதிய வேளை விருந்துண்டபின் இளைப்பாறுதலோடு
கிறிஸ்தவ சமுதாயம் அனுசரிக்கும் ஈஸ்டர் பண்டிகை
முற்றுப் பெறுகிறது வழக்கமான லெந்துகால நடவடிக்கை
அப்பாடா முடிந்தது லெந்து என நிம்மதிப் பெருமூச்சு
அடுத்து வரும் சுபகாரிய ஈடுபாட்டில் முழுமூச்சு!

சிந்தித்தோமே சிலுவை நாதரை
சந்தித்தோமா சிலுவை அன்பை?
நோக்கினோமே கல்வாரி மேட்டை
தாக்கம் தந்ததா கடைசி கட்டளை?
உற்சாகமாக அனுசரித்தோமே
உபவாச நாட்களோடு பண்டிகை
உவந்தளிப்போமா காணிக்கை?
உயிர்த்தவரை உலகுக்கு அடையாளம் காட்ட!
தொட்டுத் தொடரும் பாரம்பரிய மணம்
துளிர்த்து வளர்க்கட்டும் தெய்வீக குணம்!

Top
  Top
  Top
  Top